Wednesday, December 31, 2008

திருநங்கை

என் தோழனாயிருந்து
தோழியாய் மாறியவளே..
அல்ல அல்ல மாற்றம் பெற்றவளே..
உன்னை இப்போது எப்படி அழைக்க
வேண்டும் என்பதல்ல என் பிரச்சினை..

நீ சமூகத்தை எப்படி எதிர் கொள்ள போகிறாய் என்பதுமல்ல..
இந்த சமூகம் உன்னை எப்படி நடத்தப்
போகிறது என்பதுதான்..
குரோமோசோம்களின் எண்ணிக்கை
மாறுபாட்டிற்கு நீ என்ன செய்வாய் என் நட்பே..
அதை சமூகம் எப்போது உணரும்?

சிலர் உன்னைப் போல இருக்கும் உயிர்களை
வார்த்தையால் வேட்டையாடவும் தவறுவதில்லை..
அந்த சில வார்த்தைகளை கேட்க நேரும்தோறும்
கண்ணில் அல்ல கர்ப்பப்பையில் இரத்தம் வருகிறது நட்பே..

எப்போதும் உன் உணர்வுகளை நான் உணர முடியாது
என்பது எனக்கு மிக நன்றாய் தெரியும்..
ஆனால் உன் உணர்வுகளை மதிக்க மற்றவருக்குக்
க்ற்றுக் கொடுப்பேன் நட்பே...

சமூகமே இவர்களுக்கு
பாராட்டு தேவை இல்லை
பண்பாடோடு நடந்தால் போதும்..
ஊக்கம் தேவை இல்லை
உதாசீனப் படுத்தாமலிருந்தால் போதும்..
உற்சாகப் படுத்த வேண்டாம்
உறுதியை தகர்க்காமல் இருந்தால் போதும்..
நாளை திருநங்கையின் வாழ்வும் உயரும்...

------------- இவள் பாரதி
bharathi_viji2007@yahoo.co.in