Friday, October 9, 2015

குறி அறுத்தேன் - கவிதை : கல்கி சுப்ரமணியம்



குறி அறுத்தேன்
________________

மாதவம் ஏதும் 
செய்யவில்லை நான்.
குறி அறுத்து
குருதியில் நனைந்து
மரணம் கடந்து
மங்கையானேன்.
கருவறை உனக்கில்லை
நீ பெண்ணில்லை
என்றீர்கள்.
நல்லது.

ஆண்மையை
அறுத்தெறிந்ததால்
சந்ததிக்கு
சமாதி கட்டிய
பட்டுப்போன
ஒற்றை மரம் நீ,
விழுதுகள் இல்லை
உனக்கு,
வேர்கள்
உள்ளவரை மட்டுமே
பூமி உனை தாங்கும்
என்றீர்கள்.
நல்லது.

நீங்கள் கழிக்கும்
எச்சங்களை,
சாதி வெறியும்
மதவெறியும்
கொண்டு நீங்கள்
விருட்சமாக்க
விதைபோட்ட
உங்கள் மிச்சங்களை
சிசுவாக சுமக்கிற
கருவறை
எனக்கு வேண்டாம்.
உங்கள்
ஏற்றத்தாழ்வு
எச்சங்களை
சுமந்ததால்
பாவம்
அவள் கருவறை
கழிவறை ஆனது.

நல்லவேளை
பிறப்பால்
நான் பெண்ணில்லை.
என்னை பெண்ணாக
நீங்கள்
ஏற்க மறுத்ததே
எனக்குக்கிடைத்த விடுதலை.


பெண்மைக்கு
நீங்கள் வகுத்துள்ள
அடிமை இலக்கணங்களை
நான் வாசிப்பதில்லை.
என்னை இயற்கையின் பிழை
என்று தாராளமாய்
சொல்லிக்கொள்ளுங்கள்.
நான் யார் என்பதை
நானே அறிவேன்.


மதம் மறந்து
சாதி துறந்து
மறுக்கப்பட்டவர்கள்
ஒன்றுகூடி
வாழும் வாழ்க்கையை
வாழமுடியுமா
உங்களால்?

கருவில்
சுமக்காமலேயே
தாயாக முடியுமா
உங்களால்?

மார்முட்டி பசியாறாமலேயே
மகளாக முடியுமா
உங்களால்?

என்னால் முடியும்.

உங்களின் ஆணாதிக்க
குறியை அறுத்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் யார் என்பதை
அப்போது
நீங்கள் அறிவீர்கள்.

பிறகு சொல்லுங்கள்
நான் பெண்ணில்லை என்று.


                       -திருநங்கை கல்கி சுப்ரமணியம் - 
இதன் தொடர்ச்சியாகத்தான் NALSA (National Legal Services Authority)  இந்திய உச்சநீதி மன்றத்தில் திருநர்களுக்கு சமூக நீதிகேட்டு 2012ல் வழக்கு தொடுத்தது. வழக்குத்தொடுத்து ஒன்றரை ஆண்டுகளுக்குப்பின் ஏப்ரல் 15, 2014 அன்று தமிழக திருநங்கைகள் தினத்தன்று திருநங்கைகளின் பாலின அடையாளத்தையும்  உரிமைகளையும் அங்கீகரிக்கிற வரலாற்றுச்சிறப்பு மிக்க உச்சநீதிமன்ற தீர்ப்பின் பின்னணியாகும். - See more at: http://sahodari.blogspot.in/#sthash.pV1pSdvu.dpuf

Monday, June 15, 2009

மூன்றாம் பாலினமாக அறிவிக்க ....

மூன்றாம் பாலினமாக அறிவிக்க வலியுறுத்தி அரவானிகள் கையெழுத்து இயக்கம்

அரவானிகளை மூன்றாம் பாலினமாக அறிவிக்க வலியுறுத்தி 27.06.2009 அன்று கையெழுத்து இயக்கம் நடத்துகின்றனர்.

சாதிய அடிப்படையிலும் பாலின அடிப்படையிலும் இடஒதுக்கீடு வழங்குவது போல அரவானிகளுக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் பங்கேற்புக்கான இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

வாக்குரிமை,சொத்துரிமை போன்றவற்றை அரவானிகளுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது.

கையெழுத்துகள் பெறப்பட்ட பின்னர் பிரதமர், குடியரசுத்தலைவர், தமிழக முதல்வர் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பிவைக்கப்படவுள்ளதாக அகில இந்திய அரவானிகள் உரிமை மற்றும் மறுவாழ்வு மய்யச் செயலாளர் பி. கஜோல் தெரிவித்தார்.
நன்றி : தினமணி 27.06.2009

Wednesday, December 31, 2008

திருநங்கை

என் தோழனாயிருந்து
தோழியாய் மாறியவளே..
அல்ல அல்ல மாற்றம் பெற்றவளே..
உன்னை இப்போது எப்படி அழைக்க
வேண்டும் என்பதல்ல என் பிரச்சினை..

நீ சமூகத்தை எப்படி எதிர் கொள்ள போகிறாய் என்பதுமல்ல..
இந்த சமூகம் உன்னை எப்படி நடத்தப்
போகிறது என்பதுதான்..
குரோமோசோம்களின் எண்ணிக்கை
மாறுபாட்டிற்கு நீ என்ன செய்வாய் என் நட்பே..
அதை சமூகம் எப்போது உணரும்?

சிலர் உன்னைப் போல இருக்கும் உயிர்களை
வார்த்தையால் வேட்டையாடவும் தவறுவதில்லை..
அந்த சில வார்த்தைகளை கேட்க நேரும்தோறும்
கண்ணில் அல்ல கர்ப்பப்பையில் இரத்தம் வருகிறது நட்பே..

எப்போதும் உன் உணர்வுகளை நான் உணர முடியாது
என்பது எனக்கு மிக நன்றாய் தெரியும்..
ஆனால் உன் உணர்வுகளை மதிக்க மற்றவருக்குக்
க்ற்றுக் கொடுப்பேன் நட்பே...

சமூகமே இவர்களுக்கு
பாராட்டு தேவை இல்லை
பண்பாடோடு நடந்தால் போதும்..
ஊக்கம் தேவை இல்லை
உதாசீனப் படுத்தாமலிருந்தால் போதும்..
உற்சாகப் படுத்த வேண்டாம்
உறுதியை தகர்க்காமல் இருந்தால் போதும்..
நாளை திருநங்கையின் வாழ்வும் உயரும்...

------------- இவள் பாரதி
bharathi_viji2007@yahoo.co.in

Tuesday, April 29, 2008

லிவிங் ஸ்மைல் வித்யா

திருநங்கைகள் ( அரவாணிகள்) அனுபவிக்கும் வலிகள், வேதனைகளை வெளிப்படுத்தும் தோழர் லிவிங் ஸ்மைல் வித்யாவின் மிகச்சிறப்பான வலைப்பதிவு இது
www.livingsmile.blogspot.com