![]() |
குறி அறுத்தேன்
________________
மாதவம் ஏதும்
செய்யவில்லை நான்.
குறி அறுத்து
குருதியில் நனைந்து
மரணம் கடந்து
மங்கையானேன்.
கருவறை உனக்கில்லை
நீ பெண்ணில்லை
என்றீர்கள்.
நல்லது.
ஆண்மையை
அறுத்தெறிந்ததால்
சந்ததிக்கு
சமாதி கட்டிய
பட்டுப்போன
ஒற்றை மரம் நீ,
விழுதுகள் இல்லை
உனக்கு,
வேர்கள்
உள்ளவரை மட்டுமே
பூமி உனை தாங்கும்
என்றீர்கள்.
நல்லது.
நீங்கள் கழிக்கும்
எச்சங்களை,
சாதி வெறியும்
மதவெறியும்
கொண்டு நீங்கள்
விருட்சமாக்க
விதைபோட்ட
உங்கள் மிச்சங்களை
சிசுவாக சுமக்கிற
கருவறை
எனக்கு வேண்டாம்.
உங்கள்
ஏற்றத்தாழ்வு
எச்சங்களை
சுமந்ததால்
பாவம்
அவள் கருவறை
கழிவறை ஆனது.
நல்லவேளை
பிறப்பால்
நான் பெண்ணில்லை.
என்னை பெண்ணாக
நீங்கள்
ஏற்க மறுத்ததே
எனக்குக்கிடைத்த விடுதலை.
பெண்மைக்கு
நீங்கள் வகுத்துள்ள
அடிமை இலக்கணங்களை
நான் வாசிப்பதில்லை.
என்னை இயற்கையின் பிழை
என்று தாராளமாய்
சொல்லிக்கொள்ளுங்கள்.
நான் யார் என்பதை
நானே அறிவேன்.
மதம் மறந்து
சாதி துறந்து
மறுக்கப்பட்டவர்கள்
ஒன்றுகூடி
வாழும் வாழ்க்கையை
வாழமுடியுமா
உங்களால்?
கருவில்
சுமக்காமலேயே
தாயாக முடியுமா
உங்களால்?
மார்முட்டி பசியாறாமலேயே
மகளாக முடியுமா
உங்களால்?
என்னால் முடியும்.
உங்களின் ஆணாதிக்க
குறியை அறுத்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் யார் என்பதை
அப்போது
நீங்கள் அறிவீர்கள்.
பிறகு சொல்லுங்கள்
நான் பெண்ணில்லை என்று.
-திருநங்கை கல்கி சுப்ரமணியம் -
இதன்
தொடர்ச்சியாகத்தான் NALSA (National Legal Services Authority) இந்திய
உச்சநீதி மன்றத்தில் திருநர்களுக்கு சமூக நீதிகேட்டு 2012ல் வழக்கு
தொடுத்தது. வழக்குத்தொடுத்து ஒன்றரை ஆண்டுகளுக்குப்பின் ஏப்ரல் 15, 2014
அன்று தமிழக திருநங்கைகள் தினத்தன்று திருநங்கைகளின் பாலின அடையாளத்தையும்
உரிமைகளையும் அங்கீகரிக்கிற வரலாற்றுச்சிறப்பு மிக்க
உச்சநீதிமன்ற தீர்ப்பின் பின்னணியாகும். - See more at:
http://sahodari.blogspot.in/#sthash.pV1pSdvu.dpuf
No comments:
Post a Comment